×

நீலா பாட்டியின் குறிப்புகள்

நன்றி குங்குமம் தோழி

புதிதாக கல்யாணமாகி மாமியார் வீட்டிற்கு போகும் பெண்கள்… வேலைக்காக வெளியூர் போகும் பெண்கள்… இவர்களுக்கு அம்மாக்கள் சொல்லும் முதல் முக்கிய குறிப்பு சின்னச் சின்ன சமையல் மற்றும் மருத்துவ குறிப்புகளாகத்தான் இருக்கும். இன்றைய காலத்தில் கைகளுக்கு அடக்கமாக இருக்கும் செல்போன்கள் இந்த வேலையினை செய்கிறது. ஆனால் அதில் சொல்லப்படுவதும் நம் பாட்டி காலத்தில் பின்பற்றியதாகவும், முற்றிலும் இயற்கை மற்றும் வீட்டு மருத்துவமாகவும்தான் இருக்கிறது.

உடல் சூடு தணிய இளநீர் குடி, மாதவிடாய் வயிற்று வலியின் போது வெந்தயம் சாப்பிடு என்று பாட்டி, அம்மா சொல்வதைத்தான் கைபேசியும் சொல்கிறது. இளம் தலைமுறையினர் செல்போன் சொல்லும் பாட்டி வைத்தியத்தை நம்புகிறார்கள்… அதை நாம் சொன்னால், அலட்சியப்படுத்துகிறார்கள். இணையத்தில் எழுதுபவர்களும் அவர்கள் பாட்டி சொல்வதைத்தான் சொல்லி இருப்பார்கள் என்று நினைப்பதில்லை. அப்படிப்பட்ட இந்த குறிப்புகளை பல ஆண்டுகளாக குறிப்பெடுத்து வைத்தது மட்டுமில்லாமல், அதை புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார் 94 வயதான நீலா பாட்டி.

‘‘எனக்கு படிக்கவும், எழுதவும் ரொம்ப பிடிக்கும். ஆனால் நான் பத்தாம் வகுப்பு வரை தான் படிச்சிருக்கேன். அந்தக் காலத்தில் பத்தாம் வகுப்பு வரை படிக்க வைப்பதே பெரிய விஷயம். என்னதான் ஒரு பெண் படித்தால் ஒரு சமூகமே முன்னேற்றம் அடையும் என்று சொல்லி வந்தாலும் எங்கள் காலத்தில் பெண் பிள்ளைகளை படிக்க அனுப்பினதில்லை. நாங்க மூன்று சகோதரிகள். என் அப்பாவிற்கு பெண் பிள்ளைகளும் படிக்க வேண்டும் என்று எங்களை படிக்க வைத்தார். நான்தான் பாதியிலேயே நின்றுவிட்டேன். ஆனால் என் இரண்டு சகோதரிகளும் படிச்சாங்க. பள்ளியில் படிக்கும் போதே எனக்கு கடவுள், ஜோதிடம் இதிலெல்லாம் நம்பிக்கை அதிகம்.

அப்போது டி.வி எல்லாம் கிடையாது. ரேடியோதான். காலை ரேடியோவில் யோகாசனம், மருத்துவம், ஜோதிடம் சார்ந்த குறிப்புகள் சொல்வார்கள். அதைக் கேட்பது வழக்கம். நாளடைவில் அது பழக்கமாக மாற, ரேடியோ மற்றும் செய்தித்தாள்களில் வரும் குறிப்புகளை எழுத ஆரம்பித்தேன். அதையும் நோட்டுப் புத்தகத்தில் எல்லாம் எழுத மாட்டேன். கையில் கிடைக்கும் பேப்பர், புத்தக அட்டைகளில் சுருக்கெழுத்து வடிவில் எழுதி வைத்துக் கொள்வேன். பிறகு நேரம் கிடைக்கும் போது அதனை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதுவேன்.

பிறகு அதனை படித்து பார்த்து அதை சரியாக ஒரு குறிப்பாக வேறு ஒரு புத்தகத்தில் எழுதுவேன். இப்படி நான் ஒரு குறிப்பினை நான்கு ஐந்து முறை சரி பார்த்த பிறகுதான் அதனை இறுதியாக ஒரு புத்தகத்தில் எழுதுவேன். எங்க வீட்டில் நான் எழுதும் இந்த குறிப்பு சீட்டுகள் வீடு முழுக்க இருக்கும். எங்க பார்த்தாலும் உன்னுடைய சமையல், மருத்துவ குறிப்புதான் இருக்குன்னு எங்க வீட்டில் உள்ள அனைவரும் கிண்டல் செய்வாங்க’’ என்றவர் ஹிந்தி, கர்நாடக இசை மற்றும் தையல் கலையினை முறையாக கற்றுக்கொண்டது மட்டுமில்லாமல், தன் குழந்கைளுக்கு அவரே ஆடைகளை வடிவமைக்கவும் செய்துள்ளார்.

‘‘திருமணத்திற்கு பின் சில காலம் என்னுடைய குறிப்பு எழுதும் பழக்கத்தை நிறுத்தி வைத்திருந்தேன். ஆனால் வீட்டு வேலை, சமையல், பூஜை, துணி தைப்பது, பட்சணம் செய்வது என எவ்வளவு வேலைகள் இருந்தாலும், ஒரு நாள் பொழுதை போக்குவது எனக்கு ரொம்பவே கடினமாக இருந்தது. அதனால் மீண்டும் என்னுடைய குறிப்புகளை எழுதும் பயணத்தை தொடர ஆரம்பித்தேன். அந்தக் காலக்கட்டத்தில் தொலைக்காட்சி வந்துவிட்டதால், காலை அதில் வரும் ஆன்மீக செய்திகளில் இருந்து குறிப்புகளை எழுதுவேன்.

பொதுவாக செய்தித்தாள்களில் வருவதை நாம் கத்தரித்துக் கூட வைத்துக் கொள்ளலாம். ஆனால் ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் வரும் குறிப்புகளை அவர்கள் சொல்லும் போதே வேகமாக எழுத வேண்டும் என்பதால் சுருக்கெழுத்து வடிவத்தில் எழுதிக் கொள்வேன். ஆன்மீக செய்திகளைத் தொடர்ந்து மருத்துவ குறிப்புகள், யோகாசனம், ஜோதிடம், சமையல் குறிப்புகள் எனஅனைத்தையும் எழுதிக் கொள்வேன். உதாரணத்திற்கு எந்தெந்த எண்ணெய்களை எவ்வாறு சாப்பாட்டில் பயன்படுத்தலாம்.

தீராத வியாதிகளை குணமாக்கும் மருத்துவ குறிப்புகள், பெண்களுக்கான மருத்துவ குறிப்புகள்… நான் இதை எழுத காரணம் திடீரென்று வீட்டில் யாருக்காவது ஜலதோஷம் பிடித்துக் கொண்டால், உடனே மருந்துக்கடையில் மாத்திரை சாப்பிட வேண்டும் என்றில்லை. வீட்டில் இருக்கும் கைவைத்தியம் பின்பற்றலாம். அதற்காகத்தான் நான் இந்த குறிப்புகளை எழுதி வைக்க காரணம். மேலும் ஒவ்வொரு குறிப்பும் எந்த தேதியில் எதில் இருந்து குறிப்பெடுத்தோம் என்பதையும் குறித்து வைப்பேன்.

எங்க அப்பா ஹோமியோபதி மருத்துவர். அதனால் அந்த மருத்துவமும் எங்களுக்கு கொஞ்சம் தெரியும். அதாவது வீட்டில் உள்ளவர்களுக்கு சின்னச்சின்ன உடல் உபாதைகள் ஏற்பட்டால், அதற்கான மருத்துவத்தை நாங்களே செய்து கொள்வோம். அதனுடன் சேர்ந்து என்னுடைய குறிப்புகளையும் உபயோகப்படுத்துவேன். இப்ப எனக்கு வயசாயிடுச்சு. ஆனாலும் நான் படிப்பதையும் அதில் இருந்து குறிப்புகளை எழுதுவதையும் நிறுத்தவில்லை. இரண்டுமே என்னுடைய உயிர். அதை செய்யாமல் என்னால் இருக்க முடியாது.

ஆனால் முன்புபோல் முழு நேரமும் எழுதுவதில்லை. காலை எழுந்து ஸ்லோகம் சொல்லிட்டு, எப்போதும் போல குறிப்புகளை சுருக்கெழுத்து வடிவில் எழுதிக் கொள்வேன். அதன் பிறகு சில மணி நேரம் ஓய்விற்கு பிறகு நேரம் கிடைக்கும் போது விரிவாக எழுதுவேன். இத்தனை வருடங்களாக நான் எழுதி வைத்து இருக்கும் குறிப்புகள் மட்டுமே பல ஆயிரம் பக்கங்கள் இருக்கும். அதைப் பற்றி என் மகனிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

இந்த குறிப்புகள் பற்றி பலருக்கும் தெரியாது, அது மற்றவர்களுக்கு உபயோகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றேன். உடனே அவர் தன் நண்பர்களான சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் இருவரையும் தொடர்பு கொண்டு என்னுடைய குறிப்பு புத்தகத்தை கொடுத்து, அதை புத்தகமாக வெளியிட திட்டமிட்டார். அவர் அப்படி செய்வது பற்றி எனக்கு தெரியாது. திடீரென்று ஒரு மாதம் முன்பு, என் மகன் இந்த புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். ‘நீலா பாட்டியின் குறிப்புகள்’ என்ற தலைப்பில் இருந்த புத்தகத்தில் இருக்கும் குறிப்புகள் அனைத்தும் நான் என் மகனிடம் கொடுத்தவை. என் கணவரின் நூற்றாண்டு நினைவாண்டில் நான் எழுதிய இந்த குறிப்புகள் புத்தகமாக வெளியாகி இருப்பது ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார் நீலா பாட்டி.

நீலா பாட்டியின் குறிப்புகள்…

சென்னை மயிலாப்பூரில் வசித்து வரும் நீலா பாட்டி எழுதிய சின்னச் சின்ன குறிப்புகள் அடங்கிய புத்தகம் இது. பொதுவாக நமக்குத் தேவையான சில சமையல், அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனைகளை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வோம். அவர்களும் தங்களுக்கு தெரிந்த கைவைத்தியத்தை சொல்வார்கள். அதை நாம் செய்தால், கண்டிப்பாக அதற்கான பலன் தெரியும். ஆனால், நாம் யாரும் அதை பின்பற்றுவது கிடையாது. சிலது நமக்கு அந்த நேரத்தில் தேவைப்படாது, கேட்டறிந்த விஷயங்கள் வேண்டிய நேரத்தில் மறந்துவிடும். காரணம், நாம் எதையும் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வதில்லை. அதற்கு நேரமும் இருப்பதில்லை.

ஆனால் 20 வருடமாக அவர் கேட்ட, பார்த்த, படித்த விஷயங்களை ஒரு புத்தகமாக வழங்கியுள்ளார் நீலா பாட்டி. முதுமையிலும், இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஈடுகொடுக்கும் விதமாக தன் அனைத்து வேலைகளையும் முழுமையாக அதே சமயம் நேர்த்தியாகவும் செய்துகொள்கிறார். அவரின் மன வலிமை மற்றும் தான் கற்ற கல்வி, மேற்கொண்ட ஆர்வம் என அனைத்தும் அவரை இன்றும் வழிநடத்தி வருகிறது.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post நீலா பாட்டியின் குறிப்புகள் appeared first on Dinakaran.

Tags : Neela Bhatti ,Neela Patti ,
× RELATED தியாகிகளா அம்மாக்கள்!